குஜராத்:ராஜ்கோட் பகுதியில் நேற்றிரவு தொடங்கி அதிகாலை வரை கனமழை பெய்ததன் காரணமாக, இன்று ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக, ராஜ்கோட் விமான நிலையம் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ராஜ்கோட் பகுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் ஹிராசார் பகுதியில் ராஜ்கோட் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக மேற்கூரையில் தண்ணீர் தேங்கிய நிலையில், இன்று காலை 11.55 மணியளவில் மேற்கூரை சரிந்து விழுந்தது. விமான நிலையப் பணியாளர்கள் அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்று (ஜூன் 28) டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் முனையம் 1-ல் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு சம்பவ இடத்தை பார்வையிட்டு, மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதேபோல, நேற்றைய முன்தினம் (ஜூன் 27) மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்திலும் புதிய கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தொடர்ந்து மூன்று நாட்களில் மூன்று விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டிருப்பது விமான பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவங்கள் எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
11 மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டிருக்கிறது என குஜராத் காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில் விமர்சித்துள்ளார். மேலும், 11 மாதங்களில் மேற்கூரை இடிந்து விழும் பட்சத்தில், ஊழல் உச்சத்தில் இருப்பதை காட்டுகிறது எனவும், இந்த விபத்தின் போது நல்வாய்ப்பாக யாரும் இல்லை. அப்படி யாராவது உயிரிழக்க நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பியுள்ளார். ஊழலற்ற நிர்வாகத்தைப் பற்றி பேசும் மோடி, இதுபோன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என கோஹில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுபானக் கொள்கை வழக்கு; அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்! - ARVIND KEJRIWAL