புதுடெல்லி:டெல்லி, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பல்வேறு நிறுவனங்களின் விமானங்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்களுக்கு நேற்று நள்ளிரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநகரங்களில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ நிறுவனத்தின் 10 விமானங்களுக்கு பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பயணத்துக்கு தயாராக இருந்த பயணிகள் விமானங்களில் இருந்து பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் என்று இண்டிகோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் பெங்களூரில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டாக் நகருக்கு பயணிக்கவிருந்த இண்டிகோ பயணிகள் விமானம் (6E 77) தோஹாவுக்கு திருப்பி விடப்பட்டது. இதேபோன்று கோழிக்கோட்டில் இருந்து ஜெட்டாக் செல்லவிருந்த விமானம் (6E 65) ரியாத்துக்கும், டெல்லியில் இருந்து ஜெட்டாக் புறப்படவிருந்த விமானம் (6E 63) மதீனா நகருக்கும் திருப்பிவிடுப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், டெல்லியில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மம், இஸ்தான்புல் டூ மும்பை மற்றும் டெல்லி, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து ஜெட்டாக், மங்களூரு டூ மும்பை, லக்னெள டூ புனே ஆகிய உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு புறப்படவிருந்த விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.