மோரிகான்(அசாம்): மருத்துவ வசதிகள் இல்லாத அசாமின் பிரமபுத்திரா நதியின் தொலைதூர கழிமுகப்பகுதிக்கு சென்ற ஈடிவி பாரத் அனூப் சர்மா, வலிமையான பிரமபுத்திரா நதியின் கரையோர மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கலங்கரை விளக்கமாக திகழும் படகு மருத்துவமனை குறித்து விவரிக்கிறார்.
நம்பிக்கை மருத்துவமனை:தூய்மையான பிரமபுத்திரா நதி நீர் பகுதியில் அடிக்கும் காற்று, அந்த நிசப்தத்தில் லேசான இரைச்சல் ஒலியை எழுப்புகிறது. டிசம்பர் மாத குளிர் உடலை நடுக்க செய்யும் நிலையில், தம் உடலில் போர்த்தியிருக்கும் துண்டு காற்றில் நழுவி விழுந்து விடாமல் கைகளால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நதிக்கரையின் மணற்பரப்பில் 75 வயதான முதியவர் மைனுல் ஹக், அமர்ந்திருக்கிறார். படகு மருத்துவமனை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் பிரமபுத்திரா நதியை வெறித்து பார்த்தபடி காத்திருக்கிறார். அந்த மருத்துமனைதான் சுவாச கோளாறு முதல், உயர் ரதத அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவற்றுக்கு குணம் அளிக்கும் மருத்துவமனையாகும். அது ஒரு படகு மட்டும் அல்ல, மைனுல் ஹக் உள்ளிட்ட சித்தல்மாரி தீவுப் பகுதியை சேர்ந்த எண்ணற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே ஒரு நம்பிக்கையாக உள்ளது.
அசாமின் மத்திய பகுதியில் உள்ள மோரிக்கான் மாவட்டத்தின் சித்தல்மாரி தீவுப் பகுதியில் குறுவிவசாயி மைனுல் வசிக்கிறார். அவருடன் அவருடைய மகன் ரஃபிகுல் ஹக் உடன் இருக்கிறார். அவரும் ஒரு விவசாயி, அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தமது தோல் தொற்றுக்கு பரிசோதனை செய்வதற்காக அவரும் காத்திருக்கிறார். மைனுல், அவரது மகன் ஆகியோர் மட்டுமின்றி அந்த கிராமத்தை சேர்ந்த இதர பலரும் அசாம் மொழியில் நம்பிக்கை என்று பெயரிடப்பட்ட படகு மருத்துவமனைக்காக காத்திருக்கின்றனர்.
22 கிராம மக்களுக்கு சிகிச்சை:அசாமின் ஆற்று பகுதிகள் முழுவதும் தனித்தனி தீவுப்பகுதிகள், ஆற்றின் கழிமுகப்பகுதியை ஒட்டி இருக்கும் தாழ்வான பகுதிகளைக்கொண்டிருக்கின்றன. இந்த பகுதிகளில் 25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் அவர்கள் விளிம்பு நிலை விவசாயிகளாக உள்ளனர். இந்த தொலைதூர தீவுகளில் 3.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலம் உள்ளது. இந்த பகுதிகள் ஒட்டு மொத்த வளர்ச்சி, சாலை வசதி, பள்ளிகள், சுகாதார வசதிகள் ஆகியவற்றில் பின்தங்கி உள்ளன. அடிப்படை சுகாதார வசதிக்கு கூட கடினமான பயணம் மேற்கொண்டு அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
வடகிழக்கு ஆய்வு மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தால் கடந்த 2005ஆம் ஆண்டு இந்த படகு மருத்துவமனை தொடங்கப்பட்டது. பின்னர் இது தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைக்கப்பட்டது. இந்த படகு மருத்துவமனைகள் மருத்துவ வசதி அளிக்கும் பாலமாக திகழ்கின்றன. இந்த படகு மருத்துவமனைகள் வலிமைமிக்க பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் பயணித்து, தொலை தூரத்தில் உள்ள கழிமுக பகுதியில் உள்ள சமூகத்தினருக்கு அத்தியாவசியமான சுகாதார வசதிகளை அளிக்கின்றன.
இது குறித்து பேசிய நம்பிக்கை படகு மருத்துவமனையின் மாவட்ட திட்ட அலுவலர் ஷியாம் ஜித், "மோரிகான் மாவட்டத்தில் மட்டும் ஒரு படகு மருத்துவமனை 22 கிராமங்களில் 10,300 பேருக்கு சிகிச்சை அளிக்கிறது. மாதம் ஒரு முறையாவது ஒரு கிராமத்துக்கு படகு மருத்துவமனை சென்று விடும். முறையான பரிசோதனை, தடுப்பூசிகள், மருந்துகள் அளிக்கப்படுகிறது. படகு மருத்துவமனை ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்லும் முன்பு அங்குள்ள தொடர்புகள் வாயிலாக முன்கூட்டியே மருத்துவ சுகாதார அலுவலர்கள் தகவல் சொல்லி விடுவார்கள்.
இன்றியமையாத சிகிச்சை வசதி:ஒவ்வொரு படகு மருத்துவமனையிலும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். அந்த சமூகத்தினருக்கு தேவைப்படும் வகையிலான மருத்துவ முகாம்களை அவர்கள் நடத்துகின்றனர். அதிநவீன சிகிச்சை தேவைப்படும் சூழல்களில் அத்தகைய நோயாளிகள் மாவட்ட மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
அனைத்து நோயாளிகளின் தரவுகளும் ஆவணப்படுத்தப்பட்டு தேசிய சுகாதார இயக்கத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன," என ஷியாம்ஜித் கூறினார். இதன் மூலம் முறையான அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதால் சுகாதார முடிவுகள், திட்டமிட்ட இடையீடுகள் எளிதாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது,"என்று கூறினார்.