டெல்லி : பிரபல நியூஸ் ஏஜென்சியான ஏஎன்ஐ-க்கு (ANI)பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் பத்திரங்களை ரத்து செய்யப்பட்டதால நாடு தேர்தலில் கருப்பு பணத்தை நோக்கி தள்ளப்படுவதாகவும் இதற்கு அனைவரும் வருந்துவர் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் பரப்பி வருவதாகவும், தேர்தல்களில் கருப்பு பணப் புழக்கத்தை தடுப்பதே தேர்தல் பத்திரத்தின் நோக்கம் என்றும் அது தொடர்பாக குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே எதிர்க்கட்சிகள் ஓடி ஒளிவதகா பிரதமர் கூறினார்.
அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு பிறகு 16 நிறுவனங்கள் தேர்தல் நன்கொடைகள் வழங்கி இருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு பிறகு நன்கொடை அளித்த நிறுவனங்களின் மொத்த தொகையில் 37 சதவீத மட்டுமே பாஜக பெற்று உள்ளதாகவும் மீதமுள்ள 63 சதவீத நன்கொடையை எதிர்க்கட்சிகள் பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.
தேர்தல்களில் நாடு கருப்பு பணத்தை நோக்கி தள்ளப்படுவதாகவும் அதற்கு அனைவரும் வருந்துவர் என்றும் அவர் கூறினார். தேர்தல்களில் கருப்புப் பணத்தின் புழக்கம் ஆபத்தான சூழலை ஏற்படுத்தும் என்ற விவாதம் நீண்ட நாட்களாக நாட்டில் இருந்து வருகிறது என்றும் தேர்தலில் பணம் செலவிடப்படுகிறது அதை யாரும் மறுக்க முடியாது, பாஜகவிலும் தேர்தலுக்கு செலவு செய்யப்படுவதாக கூறினார்.
அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தலில் செலவு செய்யும் நிலையில் இந்த கருப்புப் பணத்தில் இருந்து தேர்தல்களை எப்படி விடுவிக்க முடியும், எப்படி வெளிப்படைத்தன்மை கொண்டு வர முடியும் என்பதன் விளைவே தேர்தல் பத்திர சட்டத்தில் திருத்த கொண்டு வர காரணியாக மாறியதாக தெரிவித்தார்.