டெல்லி:18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன்.4) எண்ணப்பட்டன. இதில் ஆளும் பாஜக 293 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் காணப்படுகிறது.
அதேநேரம் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 232 இடங்களை கைப்பற்றின. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா கூட்டணி பலவேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பாக தலைநகர் டெல்லியில் தேசிய ஜனநாயக மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனையில் ஈடுபட உள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. ஆனால் தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜக வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பாஜகவின் முக்கிய முழக்கங்களில் ஒன்றாக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பது தான் இருந்தது. ஆனால் தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜக 63 இடங்களை இழந்தது. குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காமல் போனதே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும்.