டெல்லி :விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. அதன்படி நேற்று (மார்ச்.2) மக்களவை தேர்தலுக்கான 195 வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார்.
அதன்படி மேற்கு வங்கம் மாநிலத்தில் அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகர் பவன் சிங் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (மார்ச்.3) மக்களவை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என நடிகர் பவன் சிங் அறிவித்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக நடிகர் பவன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், தன் மீது பாஜக தலைவர்கள் கொண்டு இருந்த நம்பிக்கைக்கு நன்றி என்றும் தனிப்பட்ட காரணங்களால் எதிர்வரும் மக்களவை தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் அவர் பதிவிட்டு உள்ளார். என்ன காரணத்திற்காக தான் தேர்தலில் போட்டியிடவில்லை என பவன் சிங் தெரிவிக்கவில்லை.
அதேநேரம் நடிகர் பவன் சிங்கின் இந்த முடிவு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான வகையில் நடிகர் பவன் சிங் சர்ச்சைக்குரிய பாடல்களை வெளியிட்டது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கருதி பவன் சிங் தேர்தலில் இருந்து விலகியதாக திரிணாமு காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.
அசன்சோல் மக்களவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் சத்ருகன் சின்ஹா களமிறக்கப்பட உள்ளார். ஏற்கனவே சந்தேஷ்காலி கலவர விவகாரத்தில் திரிணாமு காங்கிரஸ் கட்சியின் பெயர் அங்கு பெரிதும் அடிவாங்கி உள்ளதால் அதை காரணமாக காட்டி வெற்றி பெறக் கூடிய சூட்சமத்தை பவன் சிங் அறிவார் என நம்பி அவருக்கு அந்த தொகுதியை பாஜக ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பவன் சிங் இந்த முடிவு அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தொகுதியில் வலுவான வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :மேனகா, வருண் காந்தி, பிரிஜ் பூஷன் சிங்கிற்கு சீட் மறுப்பா? உ.பியில் பாஜக திட்டம் என்ன?