பெங்களூரு:கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவின் புதிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது மகடி சாலையில் பிரமாண்டமாக அமைந்துள்ள ஜி.டி.வேர்ல்டு மால் வணிக வளாகம். இந்த வணிக வளாகத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களில் ஒருவராக, கர்நாடகாவின் ஹாவேரி நகரைச் சேர்ந்த விவசாயியான ஃபக்கீரப்பா என்பவர், தமது மனைவி மற்றும் மகனுடன் திரைப்படம் பார்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில மாலுக்கு சென்றுள்ளார்.
அப்போது வணிக வளாக நுழைவாயிலில் நின்றிருந்த பாதுகாவலர், விவசாயி ஃபக்கீரப்பாவின் மகன் நாகராஜ் மற்றும் அவரது மனைவியை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்துள்ளார். அதேசமயம், முறையான உடை அணியவில்லை எனக் கூறி, ஃபக்கீரப்பாவுக்கு வளாகத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதை கண்டு ஆத்திரமடைந்த அவரது மகன் நாகராஜ், பாதுகாவலருடன் சுமார் அரை மணி நேரம் வாக்குவாதம் செய்தார். ஆனால் அதன் பிறகும் ஃபக்கீரப்பா மாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த நாகராஜ், வணிக வளாகத்தில் தனது தந்தைக்கு நேர்ந்த அவமானகரமான சம்பவம் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில், பாதுகாவலர் விவசாயிக்கு அனுமதி மறுக்கும் காட்சியும், தமது தந்தையிடம் பாதுகாவலர் மரியாதை குறைவாக நடந்து கொண்டார் என்று நாகராஜ் குற்றம்சாட்டுவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே, விவசாயிகளும், பல்வேறு கன்னட அமைப்புகளும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், வணிக வளாக நிர்வாகத்தின் மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வணிக வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து நடந்த சம்பவத்துக்காக, வணிக வளாக பணியாளர்கள் விவசாயி ஃபக்கீரப்பாவிடம் மன்னிப்பு கோரினர்.