பெங்களூரு: தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை மற்றும் பாஜக தேசிய தலைவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஜனதிகர் சங்கர்சா பரிஷத் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர், பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறிக்கப்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததற்காக வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:'முடா' விவகாரம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்த போலீசார் வழக்குப்பதிவு!
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நிர்மலா சீதாராமன் மீது மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஒரு மத்திய அமைச்சர். அவர் மீதும் எஃப். ஐ.ஆர் உள்ளது. அவரும் ராஜிநாமா செய்யக் கூடாதா? அவர்கள் (பாஜக) ராஜிநாமா செய்யட்டும்; என் வழக்கில் கீழமை சிறப்பு நீதிமன்றம் முடிவெடுத்து 3 மாதங்களில் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளது." என்றார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 42வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை அதிகாரிகள், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக தேசியத் தலைவர்கள், அப்போதைய பாஜக கர்நாடக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல், பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது ஜனாதிகர் சங்கர்ஷ் பரிஷத் புகார் அளித்திருந்தது.
இந்நிலையில் புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பெங்களூருவில் உள்ள திலக் நகர் போலீசாருக்கு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கில் மனுதாரர் ஆதர்ஷ் ஐயர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலன் வாதிட்டார். வழக்கின் விசாரணை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்