பாங்குரா:நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலம் பங்குரா மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூர் தொகுதியில் முன்னாள் தம்பதிகளான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் சுஜாதா மோண்டலும், பாஜக எம்பி சௌமித்ரா கான் இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தியா முழுவதும் வேட்பாளர் அறிவிப்பு, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர் தொகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திரிணாமுல் காங்கிரஸ் சுஜாதா மோண்டாலை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த மாதத் துவக்கத்தில் பாஜக பிஷ்ணுபூர் தொகுதியின் வேட்பாளராக சௌமித்ரா கானை அறிவித்திருந்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் உறுப்பினராக சௌமித்ரா கான் இருந்தபோது, சுஜாதா மோண்டல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இருவரும் சந்தித்த போது, காதல் மலர்ந்து நெருங்கிப் பழகி திருமணம் செய்து கொண்டனர். அப்போது, சுஜாதா மோண்டல் சௌமித்ரா கானின் தூண் என்று வர்ணிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கான் 2019ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு மாறினார்.
ஆனால், 2020ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் அரசியலில் ஈர்க்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் டிஎம்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இதனால் 10 ஆண்டு காலக் காதல் கதை அரசியல் லட்சியத்திற்குப் பலியானதாகக் கூறப்படுகிறது. பின்னர், சில கருத்து வேறுபாடு காரணமாக மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.