டெல்லி: 18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 3வது முறை பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாளம் பிரதமர் புஷ்ப கமல் தஹல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
புதன்கிழமை (ஜூன்.5) நேபாளம் பிரதமர் பிரசந்தாவுடனான தொலைபேசி உரையாடலின் போது பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் நேபாளம் பிரதமர் பிரசந்தா கலந்து கொள்வது குறித்து நேபாள பிரதமர் அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது.
அதேபோல் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து நாளை (ஜூன்.7) சிறப்பு விமானத்தில் டெல்லி வந்தடையும் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதனிடையே வங்கதேசம் - இந்தியா இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இரு நாடுகளின் சார்பிலும் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜூன் 8ஆம் தேதி 3வது முறை பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.