தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வங்கதேச விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ராகுல் காந்தி பேசியது என்ன? - all party meeting delhi - ALL PARTY MEETING DELHI

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்யும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்த நிலையில், வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

டெல்லி இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்
டெல்லி இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் (Credit - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 4:45 PM IST

புதுதில்லி:அண்டை நாடான வங்கதேசத்தில் வெடித்துள்ள மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக அங்கு ஆட்சி நிர்வாகத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்துவந்த ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேற்று (ஆகஸட் 5) நாட்டைவிட்டே வெளியேறினார். இந்தியாவில் அவர் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், வங்கதேசம் தற்போது அந்நாட்டின் ராணுவ கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. 18 பேர் கொண்ட குழுவின் தலைமையில் இடைக்கால அரசை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் அங்கு நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வங்கதேச நிலவரம் குறித்தும், இந்த பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் ஆலோசிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், வங்கதேசத்தின் தற்போதைய நிலவரம் குறித்தும், இந்த பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கி பேசினார்.

அப்போது அவர், " இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்யும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து அறிய அவருக்கு போதிய அவகாசமும் அளிக்கப்படும்" என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

மத்திய அரசு வங்கதேச ராணுவத்துடனும் தொடர்பில் இருப்பதாகவும். இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், அங்குள்ள சிறுபான்மையினர் உட்பட 20 ஆயிரம் இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்கள் 8000 பேர் வங்கதேசத்தில் இருந்து நாடு திரும்பி உள்ளதாகவும், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார் எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசின் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் என்ன என்று கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் வெளிநாட்டின் பங்கு ஏதேனும் உள்ளதா என்பதையும் மத்திய அரசு ஆராய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தேசத்தின் நலன் கருதி, வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க:வங்கதேச வன்முறையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டிற்கு தீ வைத்தது ஏன்?

ABOUT THE AUTHOR

...view details