உத்தர பிரதேசம்:கடந்த 2020 ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டிய நிலையில், கோயில் கட்டுமானத்தின் இறுதி கட்ட பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியது. இதையடுத்து கடந்த ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடத்தப்பட்டு, ராம் லாலா சிலை நிறுவப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் உட்பட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமர் கோயில் கட்டும் பணி 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும் என கோயில் நிர்வாக குழு தெரிவித்து உள்ளது.
கடந்த ஜனவரி 23ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் இராமனை தரிசனம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், பிற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அயோத்தியை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் 2023 - 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் புனித யாத்திரை மற்றும் ஆன்மீக தலங்களின் பட்டியலில் அயோத்தி முதலிடத்தில் உள்ளது. பிரபல ஹோட்டல் நிறுவனமான OYO வின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரித்தேஷ் அகர்வால் தனது எக்ஸ் வலைதளத்தில், இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத் தளமாக அயோத்தி இருக்கும்.
இந்தியாவின் பிரபல சுற்றுலாத் தளங்களான நைனிட்டாவில் 60 சதவீதமும், கோவாவில் 50 சதவீதமும் OYO ஆப் மூலம் பயனர்கள் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து உள்ளனர். ஆனால் அயோத்தியில் 70 சதவீதத்திற்கு அதிகமாக ஓயோ செயலி மூலம் விடுதிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார்.
ஆன்லைன் பஸ் டிக்கெட் தளமான அபி பஸ், அயோத்தி ராமர் கோயிலுக்கு பேருந்து மூலம் 20 முதல் 25 வயதுடையவர்களே அதிகமாக வருவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அபி பஸ்ஸின் தலைமை இயக்க அதிகாரி ரோஹித் சர்மா கூறுகையில், இளம் பயணிகளிடையே ஆன்மீக யாத்திரை பயணத்தின் ஆர்வம் அதிகரித்துள்ளதைக் கண்டோம்.
குறிப்பாக ஜெனரல் இசட் பயணிகளிடையே அயோத்திக்கான பயணத் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். EaseMyTrip இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் நிஷாந்த் பிட்டி, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து வாரணாசி மற்றும் அயோத்திக்கான தேவை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
ஹாலிடேஸ், Mice, விசா, தாமஸ் குக் லிமிடெட் தலைவர் ராஜீவ் காலே, கோயில் சுற்றுலா அயோத்தியை முன் எப்போது இல்லாத அளவுக்கு, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது எங்கள் ஆன்லைன் தேடல்களில் ஆயிரம் சதவீதத்திற்கும் மேல் ஈர்க்கக்கூடிய ஏற்றத்துடன் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி, அயோத்தியில் எந்த சொகுசு ஹோட்டல்களுக்கும் சொத்துக்கள் இல்லை. IHCL/ TAJ, ITC, HILTON, ACCOR மற்றும் MARROITT போன்ற சொகுசு ஹோட்டல் பிராண்டுகள் இதை ஒரு நல்வாய்ப்பாக பார்க்கின்றன. ஹோட்டல் தாஜின் தாய் நிறுவனமான இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் (IHCL) அயோத்தியில் உள்ள தனது மூன்றாவது சொத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இங்கு கட்டப்படவுள்ள ஹோட்டல் 2027 ஆம் ஆண்டுக்குள் திறக்கப்படவுள்ளது. பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்வதற்காக அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது. ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் 39 தனியார் விமானங்கள் அயோத்தியில் பறந்தன.
ஜெஃப்ரிஸ் அறிக்கையின் படி, 6 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட கூடுதல் உள்நாட்டு திறன் மற்றும் சர்வதேச முனையம் 2025இல் எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் மத்திய மற்றும் உத்தர பிரதேச அரசுகள், அயோத்தியை உலக சுற்றுலா வரைபடத்தில் வைக்க திட்டமிட்டு உள்ளன.
அயோத்தியில் இருந்து காசி முதல் மதுரா வரையிலான மதச் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் எளிதாக அயோத்தி செல்ல வழிவகை செய்யும் வகையில் ‘திவ்ய அயோத்தி’ என்னும் செயலியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் 50 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கபடுவதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா..! மாலையே மீண்டும் முதலமைச்சர் ஆகிறார்..!