டெல்லி: இஸ்ரேல் மீது ஈரான் நேற்று திடீர் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய நிலையில், இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ஏற்கனவே அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், தெஹ்ரானில் உள்ள தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் இஸ்ரேலால் சமீபத்தில் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பழிவாங்கும் வகையில் ஈரான் இந்த திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் எல்லைக்குள் நேற்று இரவு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு இஸ்ரேல் தனது மக்களுக்கு மொபைல் போன் வாயிலாக குறுந்தகவல் அனுப்பியது.
மேலும், ஈரான் தாக்குதல் குறித்து அரசு தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியிட்டது. மேலும், ஈரானின் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல், அமெரிக்க ராணுவம் இணைந்து இடைமறித்து தாக்கி அழித்ததாகவும், இருப்பினும், இஸ்ரேலில் லேசான பாதிப்புகள் உணரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்:இஸ்ரேல் - ஈரான் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும், பிராந்தியத்தில் சமீபத்திய பாதுகாப்பு நிலைமைகளை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பீகாரில் புதிய அரசியல் கட்சியை இன்று அறிவிக்கிறார் பிரசாந்த் கிஷோர்
அதில், "இந்தியர்கள், ஈரானுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது ஈரானில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் தோற்கடிப்பு?இதற்கிடையே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "எனது உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் இஸ்ரேலின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்துகிறது. நாங்கள் பாதிப்பை மதிப்பீடு செய்து வருகிறோம். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ஈரானின் தாக்குதல் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இது இஸ்ரேலிய ராணுவத் திறனுக்கான ஒரு சான்றாகும். அதுமட்டுமின்றி, இதுபோன்ற வெட்கக்கேடான தாக்குதலை எதிர்நோக்குவதற்கும், பாதுகாப்பு குறித்து திட்டமிடுவதற்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிடுவதற்கு இது ஒரு சான்றாகும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்