தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசாம் சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடல் மீட்பு...மேலும் 8 பேரை மீட்கும் பணி தொடர்கிறது! - ASSAM MINE TRAGEDY

இந்திய ராணுவத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப்படையின் நீர்மூழ்கி வீரர்கள் சுரங்க விபத்தில் சிக்கிய நபர் ஒருவரை உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளனர்.

அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தின் உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்க்கும் பணி தீவிரம்
அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தின் உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்க்கும் பணி தீவிரம் (Image credits-PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2025, 12:18 PM IST

டிமா ஹசாவ்(அசாம்): அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தின் உள்ளே 9 பேர் சிக்கியுள்ள நிலையில் அவர்களில் ஒருவரின் உயிரிழந்த உடலை ராணுவத்தின் நீர்மூழ்கி வீரர் மீட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப்படை தெரிவித்துள்ளது. மீதி உள்ள சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

9 பேரில் ஒருவர் உயிரிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், மீதி உள்ள எட்டுப்பேரின் நிலை என்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. எனினும் அந்த எட்டுப்பேரையும் மீட்கும் பணியில் கடற்படை, ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகளைசேர்ந்தோர் ஈடுபட்டுள்ளனர்.

"டிமா ஹசாவ் மாவட்டத்தின் உம்ராங்சோ பகுதியில் உள்ள சுரங்கத்தில் முழு வீச்சில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிழமை மாலை மீட்பு பணி நிறுத்தப்பட்ட நிலையில் புதன்கிழமை காலையில் மீட்பு பணி மீண்டும் தொடர்கிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் உயிருடன் மீட்போம்,"என தேசிய பேரிடர் மீட்பு படையின் டெபுடி கமாண்டர் என்.திவாரி கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர்,"கள அளவில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல கடற்படையும் மீட்பு பணியில் உதவ உள்ளது,"என்றார்.

சுரங்கத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர் ஒருவர் கூறுகையில்,"சுரங்கத்தில் பலர் சிக்கியிருக்கின்றனர். திடீரென சுரங்கத்தில் நீர் சூழ்ந்ததால் அதில் சிக்கியிருந்தவர்கள் உதவி கேட்டு கதறினர். 35 பேர் வரை மீட்கப்பட்டனர். 16 பேர் வரை இன்னும் சிக்கியிருக்கின்றனர்,"என்றார்.

இதையும் படிங்க:HMPV: மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் - மத்திய அரசு அலெர்ட்!

இதனிடையே மீட்பு பணி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அசாம் முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா,"இந்த நிகழ்வுக்கு காரணமானவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்தது சட்டவிரோத சுரங்கம் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957ன் படி சில பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு குறித்து புலனாய்வு நடைபெற்று வருகிறது. புனிஷ் நுனிஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்," என்று கூறியுள்ளார்.

மேலும் சுரங்கத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணி குறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டியிடமும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர், "சுரங்க விபத்து குறித்து மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியுடன் பேசியுள்ளேன். உம்ராங்சோ பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு பணிக்கு உதவி அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். இதையடுத்து அவர், இந்திய நிலக்கரி துறையின் தலைமை அலுவலகத்துக்கு அளித்துள்ள உத்தரவில், அசாம் அரசின் மீட்பு பணிக்கு உதவிகள் செயய்யும் படி கேட்டுள்ளார். விரைவாக நடவடிக்கை எடுத்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்,"என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details