டெல்லி: டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபானக் கொள்கை, தனியாருக்கு லாபம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை முறைகேடு சம்பந்தமாக, அமலாக்கத்துறை 9 முறை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. மேலும், சம்மன் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று (மார்ச் 21) டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மீது அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில் நேரில் ஆஜராகும் பட்சத்தில், கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். ஆனால், இந்த மனுவை விசாரணை செய்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் மனோஜ் ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 36க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது. இதுமட்டுமல்லாது, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, தனது முதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது. இத்தகைய சூழலில் தற்போது, மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
மேலும், அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் அவசர மனு இன்று (மார்ச் 22) காலை தாக்கல் செய்யப்பட்டது. பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுக்க முறையீடு செய்யப்பட்டது. ஆனால், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா திவேதி அடங்கிய 3 பேர் கொண்ட சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதற்கு இடையில், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, டெல்லியிலுள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். எனவே, இந்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், டெல்லியிலுள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், அமலாக்கத்துறையினரால் அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்து வரப்பட்டார். அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் நாட்டிற்காக பாடுபடுவேன். சிறையில் இருந்தால் தேசத்திற்காக சேவை செய்வேன்" என தெரிவித்தார்.
இந்த நிலையில், டெல்லியிலுள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில், டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை முறைகேட்டில் மூளையாகச் செயல்பட்டவர் அரவிந்த் கெஜ்ரிவால் என்றும், இந்த மதுபான கொள்கைக்காக கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டதாகவும், இந்த பணம் கோவா, பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, டெல்லியிலுள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது.
இதையும் படிங்க:தேர்தல் பத்திர விவகாரம்: அனைத்து தகவல்களும் வெளியீடு- உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்! - SBI File Addifavit In SC