டெல்லி:டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டு முதல் முறையாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது கோடைக் காலம் நெருங்கி வருவதால் டெல்லியின் குடிநீர் விநியோகம் குறித்து அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஆதிஷிக்கு அனுப்பிய குறிப்பின் மூலம் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கூறுகையில்,"முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் இருந்துகொண்டு, நீர்வளத்துறை அமைச்சராகிய எனக்கு, தனது முதல் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். கைதுசெய்யப்பட்ட பிறகு, இப்படியான இக்கட்டான சூழலிலும் எப்படி இவ்வாறு டெல்லி மக்களைப் பற்றிச் சிந்திக்க முடியும்.
உண்மையில் இது என் கண்களில் கண்ணீர் வரவைக்கிறது. கெஜ்ரிவால் தன்னை டெல்லி முதல்வராக மட்டும் நினைக்காமல், டெல்லியின் இரண்டு கோடி மக்களையும் தனது குடும்ப உறுப்பினர்களாக நினைக்கிறார். ஒரு குடும்பத் தலைவர் எப்படி தன் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்கிறாரோ, அதுபோலவே கடந்த ஒன்பது ஆண்டுகளாக டெல்லியை அவர் நடத்தி வருகிறார்" என்று தெரிவித்தார்.
பின்னணி என்ன?:டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபானக் கொள்கை தனியாருக்கு லாபம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை அமலாக்கத்துறை சம்மன் அளித்திருந்தது. இது சம்பந்தமாக அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.