ஆந்திரப் பிரதேசம்: ஆந்திர மாநிலத்தில் கடந்த மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு அங்குள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இரு தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இரு தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலையில் உள்ளது.
ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி அடங்கிய என்டிஏ கூட்டணிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த நிலையில், அங்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்படி மொத்தமுள்ள 175 இடங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் பின் தங்கியுள்ளது. பாஜக 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல, மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 4 இடங்களில் பின் தங்கியுள்ளது. அதனை தொடர்ந்து பாஜக 3 இடங்களில் நீடிக்கிறது.
முன்னதாக, ஆந்திராவில் மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் என்டிஏ கூட்டணி 21 முதல் 25 இடங்களைப் பெறும் என சொல்லப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 22 இடங்களை பெற்றிருந்த நிலையில் இம்முறை பெரும் சரிவை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 120 தொகுதிகளை பெற்று ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை! ராகுல் காந்தி வெற்றி முகம்!