ஶ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க சாத்தியமான முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக டெல்லிக்கு ஒமர் அப்துல்லா நேற்று வருகை தந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய அதிகாரிகள்,"ஒமர் அப்துல்லா-அமித்ஷா இடையிலான சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது,ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை ஒமர் அப்துல்லா, அமித்ஷாவிடம் அளித்தார்.ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்,"என்றனர்.
இதனைத்தொடர்ந்து தமது பயணத்தின் இரண்டாம் நாளான இன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியையும் ஒமர் அப்துல்லா சந்தித்துப் பேசினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Image credits-ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்