பாலக்காடு : விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது. தென் மாநிலங்களை குறிவைத்து உள்ள பிரதமர் மோடி தொடர் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி, முன்னதாக கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அங்கு விரைந்தார். கேரளா பாஜக தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பிரதமர் மோடி வாகன பேரணியில் ஈடுபட்டார்.
அவருடன் கேரளா பாஜக தலைவர் ஸ்ரீதரன், பாலக்காடு தொகுதி பாஜக வேட்பாளர் சி.கிருஷ்ணகுமார், பொன்னை தொகுதி பாஜக வேட்பாளர் நிவேதிதா சுப்ரமணியன், உள்ளிட்டோ திறந்து வெளி வாகனத்தில் பிரதமர் மோடி உடன் பயணித்தனர். சாலையில் இரு பகுதியிலும் திரண்டு இருந்த மக்கள் பூக்களை தூவி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் இரு பகுதிகளில் இருந்து பிரதமர் மோடியின் பூக்களை வீசியும், கட்சிக் கொடி முதலியனவற்றை பறக்கவிட்டும், மோடி, பாரத் மாதா கீ ஜே, மோடி கா ஜெய் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மொத்தம் 20 தொகுதிகளை கொண்ட கேரளாவில் ஒரே கட்டமகா வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கேரளாவில் வலுவாக இருப்பதாக காணப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பாஜக ஆதிக்கம் செலுத்திய போது கேரளாவில் ஒரு இடம் கூட கைப்பற்ற முடியவில்லை.
அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி வலுவாக காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இவர்களை மீறி கேரளாவில் பாஜக தடம் பதிப்பது என்பது கேள்விக் குறிதான் என அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க :மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா! என்ன காரணம்? ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகலா?