டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கடந்த 2017 இல் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தற்போதைய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகர், லலித் குமார் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீஸ் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக, சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார், தலைநகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரலில் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து 1.3 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், பிஎம்டபள்யூ மற்றும் மெர்சிடிஸ் காரையும் ோலீசார் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகேஷ், ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி விஷால் கோக்னே, சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டார். குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 479 (1) மற்றும் (3) இன்படி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்றுநீதிபதி தமது உத்தரவில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் பெற்றாலும், அவர் மீது விசாரணையில் உள்ள பிற வழக்குகள் காரணமாக அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.