பூரி:ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஜெகநாதர் ஆலய விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெகநாதர் ஆலயத்தின் ரத்ன பந்தர் அறை 46 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது. பொக்கிஷ அறையான ரத்ன பந்தர் அறை திறக்கப்பட்டதை அடுத்து அதில் உள்ள தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட நகை ஆபரணங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரத்ன பந்தர் அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியங்கள், மன்னர்களின் கிரீடங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெகநாதர் கோயிலுக்கு மன்னர்கள் நன்கொடையாக அளித்த அரிய நகைகளும் ரத்ன பந்தர் அறைகளில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடைசியாக கடந்த 1978ஆம் ஆண்டு ரந்தன பந்தர் அறை திறக்கப்பட்டது. அதன்பின் ஏறத்தாழ 46 ஆண்டுகள் கழித்து தற்போது ரத்ன பந்தர் அறை திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த ஒடிசா சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, பாஜக ஆட்சிக்கு வந்தால் ரத்ன பந்தர் அறை திறக்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தார்.
மேலும், முந்தைய நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு ரத்ன பந்தர் அறையின் சாவி காணாமல் போனதாக கூறிய நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியனை குறிப்பிடும் வகையில் சாவி தமிழ்நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டதா என பிரதமர் மோடி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பூஜை ஏற்பாடுகளை தொடர்ந்து புரோகிதர்கள் அதிகாரிகள் முன்னிலையில் ரத்ன பந்தர் அறை நண்பகல் 1.28 மணி அளவில் திறக்கப்பட்டது. கடந்த 1978 ஆம் ஆண்டு ரத்ன பந்தர் திறக்கப்பட்ட போது அங்கு 128.380 கிலோ எடையுள்ள 454 தங்கப் பொருட்களும், 221.530 கிலோ எடையுள்ள 293 வெள்ளிப் பொருட்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அங்கிருந்த மொத்த பொருட்களை எண்ணி முடிக்க அதிகாரிகள் 70 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டதாகவும் ஆனால் தற்போது பணியை விரைவுபடுத்த ஒடிசா அரசாங்கம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எதிர்கால குறிப்புக்காக ஆபரணங்களின் டிஜிட்டல் பட்டியலை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், ஒவ்வொரு பணியையும் மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்! பாகிஸ்தான் நதியில் கிடந்த இந்தியரின் சடலம்! என்ன நடந்தது? - indian dead in pakistan