மும்பை:பாலிவுட்டின் நவாப் என்று அழைக்கப்படும் நடிகர் சைஃப் அலி கான் (Saif Ali Khan) இன்று (ஜன.16) அதிகாலை அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள நடிகர் சைஃப் அலி கானின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும்போது அவரை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த சைஃப் அலி கான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதலில் சைஃப் அலி கானின் முதுகில் கத்தியால் குத்தப்பட்டதால் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துள்ளார் என கூறப்படுகிறது. அதிகாலை 2 முதல் 3:30 மணி வரை இந்த கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் சைஃப் அலி கானின் வீட்டிற்குள் நுழைந்தபோது வீட்டு வேலைக்காரர்கள் கூச்சலிட்டுள்ளனர். தனது படுக்கைறையில் உறங்கிக் கொண்டிருந்த சைஃப் அலி கான் கூச்சல் கேட்டு விழித்தெழுந்துள்ளார்.
படுக்கையறையிலிருந்து வெளியே வந்த சைஃப் அலி கான் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபருடன் சண்டையிட்டுள்ளார். இந்த மோதலில் அந்த அடையாளம் தெரியாத நபர் கத்தியை எடுத்து சைஃப் அலிகானை குத்தியுள்ளார். இதனால் அவர் காயமடைந்துள்ளார். சைஃப் அலி கானின் ஊழியர்கள் அவருக்கு அவசரமாக மருத்து உதவி செய்ய ஓடிய வேளையைப் பயன்படுத்திக் கொண்ட, அந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்.
சைஃப் அலி கான் சிகிச்சைக்காக லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாந்த்ரா காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
லீலாவதி மருத்துவமனையின் சிஓஓ டாக்டர் நிரஜ் உத்தாமணி கூறுகையில், “நடிகர் சைஃப் அலி கான், அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டுள்ளார். அதிகாலை 3:30 மணிக்கு அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஆறு காயங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு ஆழமானவை. காயங்களில் ஒன்று அவரது முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மெடிக் அறுவை சிகிச்சை நிபுணர் லீனா ஜெயின் மற்றும் மயக்க மருந்து நிஷா காந்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழு அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர்”, என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நடிகர் சைஃப் அலி கான் தரப்பில் இருந்து அவரது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் "திரு. சைஃப் அலி கானின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடகங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பொறுமையாக இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இது காவால்துறை தொடர்புடைய விஷயம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது சைஃப் அலி கானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூரும் அவர்களது குழந்தைகளும் வீட்டில்தன் இருந்தனர், இருப்பினும், அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது கரீனா கபூர் தரப்பில் இருந்தும் ஒரு அறிக்கையை வெளிவந்துள்ளது. அதில், "நேற்று இரவு சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கானின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
இதையும் படிங்க:மீண்டும் நன்றி தெரிவித்த அஜித்குமார்.. இணையத்தில் வெளியான வீடியோ!
சைஃப்பின் கையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தைச் சேந்தவர்கள் நலமாக உள்ளனர். காவல்துறை ஏற்கனவே உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதால், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் பொறுமையாக இருக்கவும், மேலும் ஊகங்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அக்கறைக்கு நன்றி. கரீனா கபூர் கான் குழு”, என தெரிவித்துள்ளனர்.