மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்துக்கு உட்பட்ட விருந்தாவன் சாலை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் நேற்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அங்கு ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுரத்கர் மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி எடுத்துச் சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை. இந்த விபத்து குறித்து ஆக்ரா கோட்ட ரயில்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் அகர்வால் கூறுகையில், "சரக்கு ரயில் தடம் புரண்டதால், மூன்று ரயில் பாதைகளில் போக்குவரத்து தடைபட்டது. விருந்தாவன் யார்டு பகுதியை ரயில் கடந்து சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இரவு 8.12 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. சூரத்கர் (ராஜஸ்தான்) மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், ரயிலின் 25 வேகன்கள் தடம்புரண்டன" என்றார்.
இதையும் படிங்க: திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு.. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!
இந்த விபத்துக்கு இதுபோன்ற முந்தைய சம்பவங்களுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா அல்லது நாசவேலை ஏதும் இருக்கக் கூடுமா என கேட்டபோது, அதற்கு பதிலளித்த கோட்ட ரயில்வே மேலாளர் தேஜ் பிரகாஷ், "சரக்கு ரயில் தடம் புரண்டதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை. விபத்தால் 3 ரயில் தண்டவாளங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தற்போது 4வது தண்டவாளத்தில் மட்டும் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சேதமடைந்த ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து (Credit-ANI) ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் மாநகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சரக்கு ரயில் தடம் புரண்டதால் மற்ற ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "ரயில் போக்குவரத்தை சீரமைக்க சோன்பூர், சமஸ்திபூர் மற்றும் பரவுனியில் இருந்து விபத்து சீரமைப்பு ரயில்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளன. 13 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் 3 ரயில்கள் பகுதி நிறுத்தத்துடன் இயக்கப்படும்" என்றனர்.