டெல்லி :இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட 1 லட்சத்து 27 ஆயிரத்து 644 ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் பணியிடங்களை காட்டிலும் கடந்த மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி 18 ஆயிரத்து 766 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த காலிப்பணியிடம் என்பது ஒட்டுமொத்த ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர்களுக்கான பணியிடங்களில் 14 புள்ளி 7 சதவீதம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மண்டலங்களிலும் உதவி ஓட்டுநர்களை விட ஓட்டுநர்களுக்கான காலிப் பணியிடம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனுமதிக்கப்பட்ட 70 ஆயிரத்து 93 லோகோ பைலட்டுகளில் 14 ஆயிரத்து 429 ஓட்டுநர் பணியிடங்கள் அதாவது 20 புள்ளி 5 சதவீதம் காலியாக உள்ளதாக ஆர்டிஐ தகவலில் கூறப்பட்டு உள்ளது. அதேபோல் அனுமதிக்கப்பட்ட 57 ஆயிரத்து 551 உதவி ஓட்டுநர்கள் பணியிடங்களில் 4 ஆயிரத்து 337 பணியிடங்கள் அதாவது 7 புள்ளி 5 சதவீதம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் இந்த தகவலை பெற்று வெளியிட்டு உள்ளார். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தால் தற்போது பணியில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்களின் பணி நேரத்தை அதிகரிக்கச் செய்வதாக பல்வேறு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், அதிகரிக்கும் வேலைப் பளு, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்கள் ஓட்டுநர்கள் பாதுகாப்பான முறையில் ரயில்களை இயக்குவதில் இடர்பாடுகள் ஏற்படக் கூடும் என அனைத்து இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.
ரயில் லோகோ பைலட்டுகளின் 9 மணி நேரம் பணி சூழல் என்பது பணியாளர் பற்றாக்குறை காரணமாக 12 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். நடப்பாண்டு ஜனவரி மாதம் 5 ஆயிரத்து 696 லோகோ பைலட்டுகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டது.
இதையும் படிங்க :டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா? என்ன காரணம்? பாஜகவில் இணைய திட்டமா? - Lok Sabha Election 2024