தமிழ்நாடு

tamil nadu

டெல்லியின் 3வது பெண் முதலமைச்சராக அதிஷி பதவியேற்பு.. கடந்து வந்த பாதை! - delhi new CM Atishi

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

Updated : 3 hours ago

டெல்லி புதிய முதலமைச்சராக அதிஷி மர்லினா(atishi marlena) இன்று பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து கோபால் ராய், கைலாஷ் கஹ்லோட், சௌரப் பரத்வாஜ், இம்ரான் ஹுசைன் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

முதலமைச்சர் அதிஷி
முதலமைச்சர் அதிஷி (Credits - ANI)

டெல்லி :டெல்லி முதலமைச்சராக அதிஷி மர்லினா இன்று( செப்.21) பதவியேற்றார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் ஆகியோர் வரிசையில் டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சர் பட்டியலில் அதிஷி இணைந்துள்ளார்.

டெல்லி ராஜ் நிவாஸில் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சனா அதிஷிக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.அவருடன் தொடர்ந்து புதிய அமைச்சர்களாக கோபால் ராய், கைலாஷ் கஹ்லோட், சௌரப் பரத்வாஜ், இம்ரான் ஹுசைன் ஆகியோருக்கும் ஆளுநர் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். மேலும், முதல் முறை எம்எல்ஏவாக முகேஷ் அஹ்லாவத்வும் இன்று பதவியேற்றார்.

யாருக்கு எந்த துறை? : கோபால் ராய்க்கு சுற்றுச்சூழல் மற்றும் பொது நிர்வாகத்துறையும், சௌரப் பரத்வாஜ்க்கு சுற்றுலாத் துறையும், கைலாஷ் கஹ்லோட்க்கு போக்குவரத்து துறையும், இம்ரான் ஹுசைனுக்கு உணவுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் செப்.23ம் தேதி சட்டசபை கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதில், அதிஷி தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டத்தில் சிறப்புரையாற்ற இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன. அதில், 61 இடங்கள் ஆம் ஆத்மி வசம் உள்ளன. இதனால் அதிஷி பெரும்பான்மையை நிரூபிப்பது சுலபமாக இருக்கும்.

இதையும் படிங்க:சுசேதா கிருபளானி முதல் அதிஷி வரை.. முதல்வர் பதவியை அலங்கரித்த பெண்கள் பட்டியல்!

யார் இந்த அதிஷி?: அதிஷி மர்லினா கடந்த 1981ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்கள் இருவருமே டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள். அதிஷி கடந்த 2001 ஆம் ஆண்டு செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை வரலாற்று படிப்பை முடித்தார். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2003 ஆம் ஆண்டு முதுகலை வரலாற்று படிப்பை முடித்தார்.

அரசியல் பயணம்: அதிஷி ஆம் ஆத்மி கட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு இணைந்தார். அரசின் ஆலோசகராக இருந்தவர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் கல்காஜி தொகுயில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் கைதான நிலையில் இவருக்கு அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டது. அதன்படி, கல்வி மற்றும் பொதுப்பணித் துறை (PWD) அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக பணியாற்றியபோது பள்ளி வசதிகளை மறு வடிவமைப்பதிலும், கற்பித்தல் தரத்தை உயர்த்துவதிலும் பல முயற்சிகளை தொடங்குவதிலும் முக்கிய பங்காற்றினார். இது அவரின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க:அடி மாட்டு விலையில் நெய்! திருப்பதி லட்டு கலப்படத்திற்கு இது தான் காரணமா?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்தபோது நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டார். அதிஷி. மேலும், கட்சியின் பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். சௌரப் பரத்வாஜுடன் இணைந்து, நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்கினார். சமீபத்தில் ஹரியானா - டெல்லி தண்ணீர் பிரச்னையின்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

இப்படியாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கியமான தலைவராக வலம் வந்த அதிஷிக்கு தற்போது முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்துள்ளது. டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தான் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இதனால் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரை முதலமைச்சராக பதவியில் நீடிப்பார் அதிஷி.

முன்னதாக, டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால், கடந்த சனிக்கிழமை அன்று, இன்னும் இரண்டு நாட்களில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார்.

அதேநேரம், டெல்லி மக்கள் தன்னை நேர்மையானவர் என சான்றிதழ் வழங்கும் வரை நான் முதலமைச்சராகப் பதவி ஏற்கப் போவதில்லை என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த செப்.17 ஆம் தேதி நடைபெற்றது.

அதில், அதிஷி பெயரை முதலமைச்சர் தேர்வுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். அதற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம், அதிஷிக்கு ஆம் ஆத்மி சட்டமன்றக் குழு தலைவராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிஷி டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது 2 பெண் முதலமைச்சர்கள் உள்ளனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் அதிஷி ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : 3 hours ago

ABOUT THE AUTHOR

...view details