ஏனாம் (புதுச்சேரி):ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள ஏனாம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டது. அங்கு அகரஹாரம் என்ற பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 1ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சாய் ரோகீத்(7). இவர் மதிய உணவு சாப்பிட வீட்டுக்குச் சென்று விட்டு, மதியம் 2 மணிக்கு பள்ளிக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜன.29) மதிய உணவு சாப்பிட சிறுவன் சாய் ரோகீத் வீட்டுக்கு நீண்ட நேரமாக வரவில்லை என பெற்றோர் தேடியுள்ளனர். அதனை அடுத்து சிறுவனை தேடி பள்ளிக்குச் சென்றுள்ளனர். சிறுவன் பள்ளியிலும் இல்லாததால் ஆசிரியர்களும், பெற்றோரும் பல இடங்களில் தேடினார்கள்.
அப்போது பள்ளியின் அருகே இருக்கும் பாலயோகி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர், சிறுவன் சாய் ரோகீத்தை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெண் பாஜக பிரமுகரை கொலை செய்த விவகாரம்: ஜாமீனில் வந்தவர் கொடூரமாக கொலை..குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு
பின்னர், ஏழு வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி, மருத்துவமனைக்குச் சென்று மாணவன் உடலை பார்வையிட்டார். இதனிடையே, மாணவன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்திட வலியுறுத்தி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை அடுத்து உறவினர்கள் கலைந்துச் சென்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவன் தவறி விழுந்தானா அல்லது யாராவது தள்ளி விட்டார்களா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மதுரை டூ ஹைதராபாத் ரயில் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு!