புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த அறிவிப்பை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் அகவிலைப்படி 4 % அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அடிப்படை ஊதியத்தில் 50% ஆக உள்ளது. இந்நிலையில் அரசுத் துறை வட்டாரங்களில் தற்போது உலவும் தகவல்படி, அரசாங்கம் அகவிலைப்படியை மேலும் 3 முதல் 4 % உயர்த்தலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீட்டு கட்டமைப்பில் அகவிலைப்படி முக்கிய அங்கமாக உள்ளது. நுகர்வோர் விலைக் குறியீட்டிற்கு ஏற்ப அவர்களின் ஊதியத்தை சரிசெய்வதன் மூலம் பணவீக்கத்தை சமாளிக்க இது அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
உதாரணமாக, ரூ.18 ஆயிரம் அடிப்படைச் சம்பளம் கொண்ட ஓர் ஊழியர், தற்போது ரூ.9 ஆயிரம் அகவிலைப்படி பெறுகிறார் எனில், 3 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டால், அவருக்கு மாதம் ரூ.540 அகவிலைப்படி அதிகரிக்கலாம். 4 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டால் அகவிலைப்படி ரூ.9,720 ஆக அதிகரிக்கும். இது அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளின் சுமையைக் குறைக்கும் அரசின் முயற்சியைப் பிரதிபலிக்கிறது.
ஊழியர்கள் பணவீக்க அழுத்தங்களில் இருக்கும் இக்கட்டான நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) 12 மாத சராசரியைக் கொண்ட அகவிலைப்படி கணக்கீடானது, சம்பளத் திருத்தங்களுக்கான அரசாங்கத்தின் அணுகுமுறை பொருளாதார நடப்புகளுடன் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது.