தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டு...நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசியது என்ன? - CONSTITUTION

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (2024 நவம்பர் 26) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டு விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா
அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டு விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா (Image credits-PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 6:18 PM IST

புதுடெல்லி:குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (2024 நவம்பர் 26) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஜனநாயகக் குடியரசின் அடித்தளம்:நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், "75 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், இதே நாடாளுமன்ற மைய மண்டபத்தில், அரசியல் நிர்ணய சபை புதிதாக சுதந்திரம் பெற்ற நாட்டிற்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் மிகப்பெரிய பணி நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம், அரசியல் நிர்ணய சபையின் மூலம், இந்திய மக்களாகிய நாம், இந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று, சட்டமாக்கி, நமக்கு நாமே அளித்துக் கொண்டோம்.

நமது அரசியலமைப்புச் சட்டம்தான் நமது ஜனநாயகக் குடியரசின் வலுவான அடித்தளமாகும். நமது அரசியலமைப்பு நமது கூட்டு மற்றும் தனிப்பட்ட கண்ணியத்தை உறுதி செய்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவை கொண்டாடினோம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதியன்று நாம், நமது குடியரசின் 75-வது ஆண்டைக் கொண்டாடவிருக்கிறோம். இதுபோன்ற கொண்டாட்டங்கள் இதுவரை கடந்து வந்த பயணத்தை மதிப்பீடு செய்யவும், முன்னோக்கிய பயணத்தை சிறப்பாக திட்டமிடவும் நமக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன. இத்தகைய கொண்டாட்டங்கள் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, தேசிய இலக்குகளை அடைவதற்கான நமது முயற்சிகளில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

தேசிய இயக்கத்தின் இலட்சியங்கள்:ஒரு வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது மிகச் சிறந்த சிந்தனையாளர்களின் மூன்றாண்டு கால விவாதங்களின் விளைவாகும். ஆனால், உண்மையான அர்த்தத்தில், அது நமது நீண்ட சுதந்திரப் போராட்டத்தின் விளைவு. அந்த ஒப்பற்ற தேசிய இயக்கத்தின் இலட்சியங்கள் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றன. அந்த இலட்சியங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம். இந்த இலட்சியங்கள் பன்னெடுங்காலமாக இந்தியாவை வரையறுத்து வந்துள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் எடுத்துரைக்கப்பட்டுள்ள குறிக்கோள்கள், ஒன்றுக்கொன்று நிறைவு செய்கின்றன. ஒவ்வொரு குடிமகனும் செழித்து வளரவும், சமுதாயத்திற்கு பங்களிக்கவும், சக குடிமக்களுக்கு உதவவும் வாய்ப்பளிக்கும் சூழலை அவர்கள் ஒன்றிணைந்து உருவாக்குகிறார்கள்.

குடிமக்களின் அடிப்படைக் கடமைகள்:நமது அரசியலமைப்புச் சட்ட லட்சியங்கள், நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை மற்றும் அனைத்து குடிமக்களின் தீவிர பங்கேற்பிலிருந்து வலுப்பெறுகிறது. ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமைகள் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் வரையறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல், சமூகத்தில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், பெண்களின் கண்ணியத்தை உறுதி செய்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் தேசத்தை உயர்ந்த சாதனைகளுக்கு எடுத்துச் செல்லுதல் ஆகியவை குடிமக்களின் அடிப்படைக் கடமைகளில் அடங்கும்.

இதையும் படிங்க:இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டு.... பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே உள்ளிட்டோர் வாழ்த்து!

அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு ஏற்ப, சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒன்றிணைந்து பணியாற்றுவது நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் பொறுப்பாகும். நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட பல சட்டங்களில் மக்களின் விருப்பங்கள் வெளிப்பாட்டைக் கண்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின், குறிப்பாக நலிவடைந்த பிரிவினரின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இத்தகைய முடிவுகள், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளதோடு வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளையும் வழங்கி வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் முயற்சிகள் காரணமாக, நமது நீதித்துறை அமைப்பை மேலும் திறம்பட செயல்பட வைக்க நாட்டின் நீதித்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

முன்னணி பொருளாதாரம்:நமது அரசியலமைப்புச் சட்டம் உயிரோட்டமுள்ள, முற்போக்கான ஆவணமாகும். தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், மாறிவரும் காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கான ஒரு முறையை வழங்கியுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தொடர்பான பல லட்சிய இலக்குகளை நாம் அடைந்துள்ளோம்.

புதிய அணுகுமுறையுடன், உலக நாடுகளிடையே இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை நாம் பெற்றுத் தருகிறோம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் வழிகாட்டியுள்ளனர். இன்று, முன்னணி பொருளாதாரமாக இருப்பதோடு, நமது நாடு விஸ்வ பந்துவாக இந்தப் பங்கை மிகச் சிறப்பாக ஆற்றி வருகிறது.

சுமார் முக்கால் நூற்றாண்டு கால அரசியலமைப்பு பயணத்தில், அந்த திறன்களை வெளிப்படுத்துவதிலும், அந்த மரபுகளை வளர்ப்பதிலும் நாடு குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. நாம் கற்றுக்கொண்ட பாடங்களை அடுத்த தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டும். 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் 'சம்விதான் திவஸ்' கொண்டாட்டங்கள் நமது நிறுவன ஆவணம் குறித்து நமது இளைஞர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க உதவியுள்ளன. சக குடிமக்கள் அனைவரும் தங்கள் நடத்தையில் அரசியலமைப்புச் சட்ட லட்சியங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அடிப்படைக் கடமைகளைப் பின்பற்றி, 2047 ஆம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியைடந்த விக்சித் பாரத்' என்ற தேசிய இலக்கை நோக்கி அர்ப்பணிப்புடன் முன்னேறிச் செல்லுங்கள், "என்று பேசினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details