கட்டாக்:ராணுவ அதிகாரியும்,அவரது தோழியும் இழிவு செய்யப்பட்டதாக கூறப்படும் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா வசதியே இல்லை என்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி ஒடிசாவில் 52 புதிய காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.
ஒடிசா மாநிலம் பாரத்பூரில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ராணுவ அதிகாரி ஒருவரும் அவரது தோழியும் சாலை ஓரத்தில் மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த ராணுவ அதிகாரியும், அவரது தோழியும் அருகில் உள்ள பாரத்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றனர்.
அப்போது அந்த ராணுவ அதிகாரியை போலீசார் தாக்கியதாகவும், அவரது தோழிக்கு பாலியல் ரீதியாக போலீசார் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஒடிசாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, நீதி விசாரணைக்கும் ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆந்திர போலீஸ் அத்துமீறலால் தவிக்கும் பழங்குடியினர்... நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காவல் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் யார் மீது தவறு உள்ளது என்பதை நிரூபிக்க நாடு முழுவதும் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒடிசாவில் பெரும்பாலான காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா வசதி அமைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக சர்ச்சைக்கு உரிய சம்பவம் நடந்த பாரத்பூர் காவல்நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒடிசாவின் மூத்த போலீஸ் அதிகாரி தயாள் கங்க்வார் ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,"பாரத்பூர் காவல் நிலையம் உட்பட புதிதாக கட்டப்பட்ட 52 காவல் நிலையங்களில் சிசிடிவி வசதிகள் இல்லை. புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் அவுட் போஸ்ட்களிலும் சிசிடிவி வசதிகள் அமைக்க ஒடிசா அரசுக்கு முன்மொழிவு கொடுக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 593 காவல் நிலையங்களில் 11,729 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 456 காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள 2,266 சிசிடிவி கேமராக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக பழுதடைந்த நிலையில் இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.