குல்காம்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது நடைபெற்ற என்கவுண்டரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பாதுகாப்புபடையினர் காயம் அடைந்தனர்.
குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு விரைந்த சிஆர்பிஎஃப், ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீசார் உள்ளிட்டோர் அடங்கிய பாதுகாப்பு படையினர் வியாழக்கிழமை அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி சுட்டதால், தற்காப்புக்காக பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்டரில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து பேசிய பாதுகாப்புப்படை அதிகாரி ஒருவர், "பாதுகாப்புப்படையினர் பழத்தோட்டப் பகுதியில் குறிப்பிட்ட இடத்தை கண்டுபிடித்ததும், பதுங்கியிருந்த இடத்தில் இருந்த தீவிரவாதிகள் சுட ஆரம்பித்தனர். எனவே பதிலடி கொடுக்கும் வகையில் என்கவுண்டர் நடத்தப்பட்டது. பழத்தோட்டத்தில் கிடைக்கும் ஐந்து தீவிரவாதிகளின் உடல்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை," என்று கூறினார்.
தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் நடவடிககையாகவே பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இன்னும் இரண்டு முதல் மூன்று தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மண்டல காவல்துறையினர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "குல்காம் மாவட்டம் காதர் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியது. போலீசார் உள்ளிட்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். விரிவான விவரங்கள் பின்னர் தெரியவரும்,"என்று கூறப்பட்டுள்ளது.