அகமதாபாத் : குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகை செய்ததாக கூறி உஸ்பெகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கல்வி கற்க வந்த 4 மாணவர்களை கும்பல் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விடுதி வளாகத்தில் மசூதி இல்லாத நிலையில், ரமலான் நோன்பு முடித்த இளைஞர்கள் தொழுகையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது திடீரென நுழைந்த ஒரு கும்பல், அவர்களை கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கும்பலின் திடீர் தாக்குதலில் தங்களது லேப்டாப், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனம் முதிலியன சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விடுதியின் பிளாக்-ஏ பகுதியில் கற்களை வீசிய அந்த கும்பல் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், விடுதிக்குள் தொழுகை நடத்த அனுமதி வழங்கியது யார் என கேள்வி எழுப்பியதாகவும் இதனால் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காயம் அடைந்த நான்கு மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருவதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞர்களிடையே நிலவிய கலவர சூழலை கட்டுப்படுத்தி நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான வீடியோக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து உள்ள ஐதராபாத் எம்.பி அசாசுதீன் ஓவைசி, உள்நாட்டு இஸ்லாமிய வெறுப்பு இந்தியாவின் நல்லெண்ணத்தை அழித்து வருவதாக பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க :அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறை சம்மன்! டெல்லி நீர் வாரியம் சம்மன்! என்ன காரணம்?