உன்னாவ்:உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ - ஆக்ரா விரைவு சாலையில் இன்று (ஜூலை 10) டபுள் டெக்கர் பேருந்து விபத்துக்குள்ளாகி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில், பீகார் மாநிலம் மோதிஹாரியில் இருந்து வந்த அந்த தனியார் பேருந்து இன்று அதிகாலை 5.15 மணியளவில் காதா என்ற கிராமம் அருகே லக்னோ - ஆக்ரா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பால் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்தில் பயணித்தவர்களில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இவ்விபத்து குறித்து பேசிய உ.பி., துணை முதல்வர் பிரஜேஷ் பதக் '' காயமடைந்தவர்கள் உன்னாவ் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் அருகேயுள்ள அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் பீகாரைச் சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பின்னர்தான் தெரிய வரும். விபத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே எங்களது முன்னுரிமை'' என்றார்.
இதற்கிடையே, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது எக்ஸ் தள பக்கத்தில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமுற்றவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தார். அவர் தனது பதிவில் '' உன்னாவ் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தின் உயிரிழப்பு இதயத்தை உலுக்குகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பகவான் ஸ்ரீராமனை பிராத்திக்கிறேன். நிவாரண பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என முதல்வர் யோகி ஆதித்யநாத் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும், உன்னாவ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டசபை இடைத்தேர்தல்: 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!