சாராய பாக்கெட்டுகள் விற்ற பெண்.. பொதுமக்கள் சாலை மறியல்.. கண்டுகொள்ளாத காவல் துறை.. - mayiladuthurai
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டத்தில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக, காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை அருகே கழுக்கானிமுட்டத்தைச் சேர்ந்த தவமணி மற்றும் அவரது மகள் சுபத்ரா ஆகியோர், வேப்பங்குளம் கருவக்காடு பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக சாராய விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதில், தவமணி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகையால், அவரது மகள் சுபத்ரா தொடர்ந்து அப்பகுதியில் சாராய விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேப்பங்குளம் பெண்கள், சாராய விற்பனை நடைபெறும் இடத்திற்குச் சென்று, அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த சுபத்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாமல், சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அதனை சாலையில் போட்டு உடைத்து அழித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து, அப்பகுதி வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்த பெண்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு காவல் துறையினர் வரவில்லை.
இதனையடுத்து சாராய விற்பனையில் ஈடுபட்ட சுபத்ராவை எச்சரித்த பெண்கள், பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அதேநேரம் தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக சாராய விற்பனை நடைபெற்று வருவதாகவும், இதனை காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.