குன்னூர் அருகே விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: நீலகிரி மாவட்டம், வனப்பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களால் பசுமை நிறைந்து காணப்படுகிறது. இதனால் பலா, மாங்காய் போன்றவை பழுத்து உள்ளதால், அவைகளை உண்பதற்காக சமவெளிப் பகுதியிலிருந்து யானைக் கூட்டம், நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றன.
மேலும், குன்னூர் அருகே உள்ள சேலாஸ், கொலக்கொம்பை, தூதூர்மட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கெத்தை பகுதியிலிருந்து 5 காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றித் திரிகிறது. தூதுர் மட்டம், கொலக்கம்பை போன்ற பகுதிகளில் மேரக்காய் மற்றும் மலைத்தோட்டக் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு தூதூர்மட்டம் பகுதியில், மலைத் தோட்டக் காய்கறிகள் பயிரிட்டு இருந்த இடத்தில், காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களைச் சேதப்படுத்தியும், உரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.