திருச்சி: ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி - பதைபதைக்க வைக்கும் வீடியோ! - திருச்சி அருகே தண்டவாளத்தில் சிக்கிய மூதாட்டி
🎬 Watch Now: Feature Video
Published : Oct 2, 2023, 7:49 PM IST
திருச்சி: மணப்பாறை மார்க்கெட்டிற்கு மறுபுறம் உள்ள பகுதிவாசிகள், வியாபாரிகள் ரயில் பாதையை கடந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (அக்.01) சரக்கு ரயில் ஒன்று, ரயில்வே கேட் பகுதியில் நின்று கொண்டிருந்தது.
அப்போது மணப்பாறை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டியின் அடியில் நுழைந்து தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென ரயில் கிளம்பியதால் செய்வதறியாது திகைத்த மூதாட்டி, சரக்கு ரயில் பெடிகளுக்கு அடியில் லாவகமாக படுத்துக்கொண்டார்.
சிறிது நேரத்திற்கு பின்னர் ரயில் பெட்டிகளுக்கு அடியில் மூதாட்டி சிக்கி இருந்ததை கண்ட கேட் கீப்பர், உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் அளித்து ரயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ரயில் நின்றவுடன், பெட்டிக்கு அடியில் சிக்கி இருந்த மூதாட்டி எவ்வித காயங்களுமின்றி தண்டவாளத்தை விட்டு வெளியே வந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரயில் தண்டவாளத்தின் மீது நடப்பது, தண்டவாளத்தை அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து கடப்பது ஆகியவை குற்றம் என ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரயில்வே ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.