ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் ஒய்யாரமாகத் தண்ணீர் குடிக்கும் காட்டு யானைகள்..! வைரல் வீடியோ!
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் வனப்பகுதியை ஏராளமான காட்டு யானைகள் வாழ்விடங்களாகக் கொண்டுள்ளன. காட்டு யானைகள் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வனப்பகுதியில் ஆங்காங்கு தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தொட்டிகளுக்குச் சூரிய மின்சக்தி மூலம் தானியங்கி முறையில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. காடுகளில் உள்ள யானைகள் வழக்கமாகத் தண்ணீர் தொட்டி நிரம்பியவுடன் குடித்து வருகின்றன. மேலும், வனத்துறை சார்பில் கேமரா அமைத்து யானைகள் நடமாட்டமும் கண்காணித்து வரப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஒகேனக்கல் காட்டுப் பகுதியில் உள்ள தொட்டியில் காட்டு யானைகள், செந்நாய்கள், காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கும் வீடியோ வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது X வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, “வனவிலங்குகளுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சிறப்புத் திட்டத்தின் மூலம் 2022 - 2023ஆம் ஆண்டில் காப்புக்காடுகளில் 108.88 லட்சம் மதிப்பில் 17 தண்ணீர் தொட்டிகள் உருவாக்கப்பட்டது.
தண்ணீர் தேடி வனப்பகுதிக்கு வெளியே யானைகள் செல்வதைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.