ஈரோட்டில் கொட்டித் தீர்த்த கனமழை.. அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்..! தவிக்கும் கிராம மக்கள்! - heavy rain in erode
🎬 Watch Now: Feature Video
Published : Nov 7, 2023, 6:44 PM IST
ஈரோடு: வடகிழக்கு பருவமழையையொட்டி, ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று (நவ.6) இரவு கனமழை பெய்தது. இதனால், அப்பகுதியிலுள்ள நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்கு உள்ளே மழை நீர் சென்று கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த பெரியபுலியூர், வளையக்காரன்பாளையத்தில் 12-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் போக்குவரத்திற்காக அப்பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வசித்து வரும் குடும்பங்களுக்கு இந்த தரைப்பாலம் மட்டுமே ஒரே வழியாக இருந்துவந்த நிலையில், அப்பகுதியில் நேற்று (நவ.6) பெய்த மழையில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
மேலும், இந்த தரைப்பாலம் அடிக்கடி இடிந்து விடுவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் வேலை போன்ற அத்தியாவசியத்திற்குச் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும், மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், புகார் தெரிவித்தால், “மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை என்ற பெயரில், தரைப்பாலத்தில் மண்ணை மட்டும் கொட்டி சமப்படுத்துகின்றனர்.
மீண்டும் மழை பெய்தால் தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தரைப்பாலத்தைச் சரி செய்து, நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தரவேண்டும்" என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.