ஆரம்ப சுகாதார நிலையம் இடமாற்றம்; எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டம் - எதிர்ப்பு தெரிவித்து 200 க்கும் அதிகமான
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த காவனூரில் புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், காவனூரில் அமைக்கப்பட இருந்த இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து, இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவனூர்-கண்ணமங்கலம் சாலையில் இன்று (மே 23) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆற்காடு அடுத்த காவனூர் சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கூடுதல் வசதிகளுடன் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காவனூருக்கு பதிலாக புங்கனூர் என்னும் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காவனூர் - கண்ணமங்கலம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஆற்காடு தாசில்தார் வசந்தி, திமிரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் காண்டீபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் இந்த பேச்சுவார்த்தையை அடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், காவனூர் - கண்ணமங்கலம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.