பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்: மோதிரம் பரிசளித்து நெகிழ வைத்த கிராம மக்கள்! - Pethanaickanur incident
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பெத்தநாயக்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கஞ்சிபட்டி, ஜக்கம்மாபட்டி, பெத்தநாயக்கனூர் உள்ளிட்ட 4 கிராமங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகின்றன. தற்போது இந்த பள்ளியில் 13 ஆண்டுகளாக அருளானந்தம் என்ற ஆசிரியர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
அவர் இப்பள்ளியில் பணியாற்றிய போது பள்ளி முன்னேற்றத்திற்காக கழிவறை, சுற்றுச்சுவர், குடிதண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளார். இதற்கு அந்த ஊர் பொதுமக்கள் முழு ஆதரவு கொடுத்து தாங்களும் இணைந்து பள்ளியை மேம்படுத்தினர். மேலும் அருளானந்தம் 37 ஆண்டுகளாக கரிசல்பட்டி, தர்மத்துப்பட்டி உள்ளிட்ட பள்ளிகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி தேர்வுகள் முடிந்து இறுதி நாளான நேற்று தலைமை ஆசிரியர் பணி ஒய்வு பெறுவதால் அவரை வழியனுப்ப ஊர் பொதுமக்கள் சார்பாக பள்ளியில் விழா ஏப்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெத்தநாயக்கனூர் மக்களின் முக்கிய கலையான தேவராட்டத்தினை பள்ளி மாணவ மாணவிகள் உருமி அடித்து நடனமாடி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு பவுன் மதிப்புள்ள தங்க மோதிரத்தை தலைமை ஆசிரியருக்கு பரிசாக அளித்து பிரியா விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.