இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி மௌனத்தை கடைபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்!
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: கீரமங்கலத்தில் உள்ள திரையரங்கில் நேற்று காலை 9.30 மணிக்கு நடிகர் விஜய் நடித்து வெளியாகி உள்ள 'லியோ' திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக காலை 8.45 மணியளவில் கீரமங்கலம் சிவன் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசுகள் வெடித்து, உற்சாகமாக திரையரங்கை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
அங்கிருந்த விஜய் ரசிகர்கள் அனைவரும் படத்தின் டிக்கெட்டுகளுக்காக முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரைத் தடுக்கக் கோரி மௌனம் கடைபிடிக்க முடிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் திரையரங்கிற்குள் செல்லும் வரை காத்திருந்த மக்கள் இயக்கத்தினர், ரசிகர்கள் அரங்கிற்குள் சென்ற பின்னதாக, இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் போர் குறித்தும், விஜய் மக்கள் இயக்கம் குறித்தும் பேசி விட்டு இரண்டு நிமிடங்கள் மௌனத்தை கடைபிடித்தனர்.
அப்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறுகையில், "உலக மக்களும் சரி, விஜய் மக்கள் இயக்கத்தினரும் சரி, நடிகர் விஜய்யும் சரி நாங்கள் அனைவரும் விரும்புவது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் போரானது நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான்.
உலக நாடுகள் தலையிட்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம், போரை நிறுத்திட பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமென விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்றனர்.