டெம்போவை நிறுத்தி கரும்பு தேடிய யானை.. ஆத்திரத்தில் தக்காளி பெட்டிக்கு உதை.. வைரலாகும் வீடியோ! - Erode news
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் அதன் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரும்புகளை சாப்பிடுவதற்காக யானைகள் அதன் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனிடையே, ஈரோட்டில் இருந்து கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் நகருக்கு தக்காளி பாரம் ஏற்றிச் செல்ல மினி டெம்போ சென்றது.
அந்த டெம்போ ஆசனூர் அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை மினி டெம்போவை வழி மறித்து நின்று கரும்பு உள்ளதா? என தும்பிக்கையால் அலசியது. கரும்பு இல்லாத கோபத்தில் தக்காளி பெட்டியை துதிக்கையால் தூக்கி கீழே வீசியது. பின்னர் அந்த தக்காளி பெட்டியை காலால் உதைத்து பந்தாடியது. சிறிது நேரம் டெம்போவை அங்கேயே நிறுத்திய ஓட்டுநர் யானை வனப்பகுதிக்குள் சென்ற பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.