சாலை வசதி இல்லை.. 10 கி.மீ குழந்தை சடலத்தை சுமந்த பெற்றோர்.. வேலூரில் நிகழ்ந்த அவலம்! - அத்திமரத்து கொல்லை
🎬 Watch Now: Feature Video
வேலூர்: அணைக்கட்டு தாலுகா, அல்லேரி மலைக்கிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்துக் கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி விஜி இவரது மனைவி பிரியா. இவர்களின் 1 1/2 வயது குழந்தையான தனுஷ்கா என்ற பெண்குழந்தையுடன் நேற்று இரவு வீட்டின் முன்பு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இரவு நேரம் என்பதால் அருகே உள்ள காட்டுப்பகுதியிலிருந்து நல்லபாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது.
அங்குப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பாம்பு கடித்துள்ளது. பின்னர் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு எழுந்து பார்த்த பெற்றோர் குழந்தையைப் பாம்பு கடித்ததைப் பார்த்துள்ளனர். உடனடியாக அணைக்கட்டு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்குச் செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை செல்லும் வழியிலேயே இறந்துள்ளது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அணைக்கட்டு போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து பிரேதபரிசோத முடிந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் செல்ல போதிய வசதி இல்லாமல் குழந்தையின் உடலைப் பாதி வழியிலேயே அமரர் ஊர்தி இறக்கி விட்டுச் சென்றது.
இதனையடுத்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று, பின் கால்நடையாக சுமார் 10 கி.மீ தூரம் மலைப்பகுதிக்குக் குழந்தையின் உடலை கையால் தூக்கிச் சென்றனர். மேலும் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலே கைக்குழந்தை இறந்ததும், அதனை கையாலே பெற்றோர்கள் தூக்கிச் சென்ற அவலம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் ஏற்பட்டு தாயும், குழந்தையும் பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது.