வேலூர் முத்துமாரியம்மன் கோயில் நவராத்திரி திருவிழா: மகிஷாசூரமர்த்தினியாக பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்! - சன்னதி
🎬 Watch Now: Feature Video
Published : Oct 24, 2023, 11:02 PM IST
வேலூர்: வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில். அன்னை ஆதிசக்தியின் போர்க்கோல வடிவமான ஸ்ரீ முத்துமாரியம்மன் மூலத் தெய்வமாகக் கொண்டு எழுப்பப்பட்டுள்ள இத்தலத்தில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரசன்ன வெங்கடேச பெருமாள், குபேர கணபதி, அனுமன், பைரவர் என வேறு பல சன்னதிகளும் உள்ளன.
இக்கோயிலின் முக்கிய திருவிழா என்றால் அது புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா என்றே சொல்லலாம். நவராத்திரி தொடக்கத் தினத்தில் கொடியேற்றத்துடன் துவங்கும் இத்திருவிழா 10 நாட்களும் வெகு சிறப்பாக நடைபெறும். பத்து நாள்களும் பத்து வித உற்சவராக மாறி, காளிதேவி நகர்வலம் வந்து அருள்பாலிப்பார்.
அந்த வகையில், நாளை (அக்.25) 11-ஆம் நாள் என்பதால் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. தசரா திருவிழாவின் பத்தாம் நாளில் மகிஷாசுரனை வதம் செய்யும் ஸ்ரீ மகிஷாசூரமர்த்தினியாக அருள் அளிக்கும் தேவிக்கு, தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் நிகழ்வான, சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடத்தப் பெறுகிறது.
இக்கோயிலுல் இந்த திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், இங்கு பக்தர்கள் தங்கள் குறையைக் கூறி, அம்மனை வேண்டி பல்வேறு நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, தங்கள் வேண்டுதல் நிறைவேறிய மக்கள் மற்றும் வேண்டுதல் வைத்திருப்பவர்கள் என அனைவரும் பல்வேறு காணிக்கைகளைச் செலுத்தி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.