மயிலாடுதுறை: கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்தனர். அந்த விவகாரத்தை விட, மயிலாடுதுறை முட்டத்தில் நடந்த மரணங்கள் கொடூரமானது. அது சாராயம் குடித்து நிகழ்ந்த மரணம், ஆனால், இது சாராய விற்பனையை தடுக்க போராடி நிகழ்ந்த மரணம். அதனால், நீதிமன்றம் தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும், உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
மயிலாடுதுறையில் பிப்ரவரி 14ஆம் தேதி இரவு முட்டம் பகுதியில் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்ட ஹரீஸ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரது குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோர் நேற்று (பிப்.16) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது ஹரிஷின் தாயார் கிழே விழுந்து கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில், "காவல்துறை உரிய நேரத்தில் செயல்பட்டிருந்தால், இந்த கொலை நடந்திருக்காது. உண்மை குற்றவாளிகளை மறைக்கும் நோக்கத்துடன் காவல்துறை செயல்பட்டுள்ளது" எனக் குற்றஞ்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நாதக கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், "இந்த கொலை வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாகத் தலையிட வேண்டும். காவல்துறையினர், வருவாய்த்துறையினர் செய்ய வேண்டிய சாராய விற்பனையை தடுக்கும் வேலையினை, உயிரிழந்த இந்த இரண்டு இளைஞர்களும் செய்துள்ளனர்.

தற்போது வரை எஃப்ஐஆர் பதியவில்லை:
இப்பகுதியில் நடைபெறும் சாராய வியாபாரம் குறித்து ஏற்கனவே எட்டு புகார்கள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால் கூட, இந்த கொலைகள் நடந்திருக்காது. பிப்ரவரி 11ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராஜ்குமார், பிப்ரவரி 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளிவந்த நிலையில், அன்றிரவு 7 மணிக்கே இந்த கொலைகள் நடந்துள்ளன. கொலைக்கு உடந்தையாக இருந்த மஞ்சுளா, கார்த்திகா ஆகிய இரண்டு பெண்கள் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்படவில்லை.
நடவடிக்கை எடுத்திருந்தால் 2 உயிர் போயிருக்காது:
அவர்கள்தான் இவர்களை கொலை செய்யச் சொல்லி தூண்டியதாக, கொலையை நேரில் பார்த்த ஹரிசக்தியின் சகோதரர் கூறியுள்ளார். இந்த நிலையில், கொலைக்கான காரணம் முன்விரோதம்தான் என காவல்துறையினர் மடைமாற்றம் செய்வதற்கான காரணம் என்ன? போலீசார் கண்துடைப்புக்காக வழக்குகளை போட்டு, உடனடியாக சாராய வியாபாரிகளை விடுவித்து விடுகின்றனர். இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இரண்டு உயிர்கள் போயிருக்காது.
இதையும் படிங்க: "திமுகவின் அரசியலுக்கு மாணவர்களை பலியாக்கக் கூடாது" - எல்.முருகன் காட்டம்!
தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்:
இது தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் தோல்வி. எனவே, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் உள்பட அனைவரின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கிராமத்தில் 30 பேர் இதுவரை சாராய வியாபாரிகளால் தாக்கப்பட்டுள்ளனர். பரம்பரையாக திமுகவுக்கு வாக்களிக்கக் கூடிய மக்கள் வசிக்கக் கூடிய, இந்த கிராமத்தில் நடைபெற்ற மரணத்தை ஏன் இதுவரை எந்த திமுகவினரும் கண்டுகொள்ளவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.
இரண்டு இளைஞர்களின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தலைமையில், மாபெரும் போராட்டம் நடத்துவோம். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.