வெகு விமரிசையாக நடைபெற்ற வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோயில் பூர்வாங்க பூஜைகள்! - பூர்வாங்க பூஜை
🎬 Watch Now: Feature Video
வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனையொட்டி,கோயில் வளாகத்தில் நான்கு பிரதான மகா யாக சாலைகளும், 15 பரிவார யாக சாலைகள் உள்பட மொத்தம் 54 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 21) காலை 9 மணிக்கு கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வமேதா பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, மஹாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாரதனை ஆகியவையும் நடைபெற்றது.
இதில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், கோயில் நிர்வாகிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த பூர்வாங்க பூஜையில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பல லட்சம் பக்தர்கள் வருகையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.