தேனி அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி! - மார்கழி
🎬 Watch Now: Feature Video
Published : Dec 23, 2023, 11:57 AM IST
தேனி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு 'கோவிந்தா, கோவிந்தா..' என பக்தியோடு கோஷங்களை எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்.
தேனி அல்லிநகரம் பகுதியில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில், இன்று (டிச.23) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனைக் காண்பதற்காக, அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் சொர்க்கவாசல் முன்பாக அமர்ந்து நீண்ட நேரமாக சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, சுமார் நான்கு முப்பது மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவர் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு காட்சியளித்தார். சொர்க்கவாசல் வழியை காட்சி தந்த பெருமாளை 'கோவிந்தா, கோவிந்தா..' என கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர், சப்பரத்தில் கோயில் வளாகத்தை சுற்றிய உற்சவர், மீண்டும் சன்னதியை அடைந்தார். உற்சவர் பெருமாள் கிரீடத்துடன் ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து உற்சவருக்கு தூபத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.