திருவள்ளூர் - ஸ்ரீ பெரும்புதூர் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து! - sri perumbudur
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிறுவனத்திற்கு 25 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து போலிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து திருவள்ளூர் நோக்கி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த பயங்கர விபத்தில், தனியார் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்ததில் 20 பேர் பலத்த காயமடைந்த நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவள்ளூர் - ஸ்ரீ பெரும்புதூர் நெடுஞ்சாலைகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும், டிப்பர் லாரிகள் அரசு அனுமதித்த அளவிற்கு அதிகமாக மணல், எம் சாண்ட், ஜல்லி, சவுடு மண் போன்றவற்றை ஏற்றிக் கொண்டு செல்வதால் ஓட்டுநர் லாரியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாமல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் நிலையை அறிந்து மாவட்ட போக்குவரத்து துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை சாலையில் இயக்குவதை தடை செய்து விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.