வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்.. பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.. திருச்சி எஸ்.பி. சுஜித் குமார்..
🎬 Watch Now: Feature Video
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்ததால் தமிழ்நாட்டில் உள்ள புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்த வீடியோ வெளியான சில நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இருப்பினும், அவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடவே செல்வதாகவும், தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ குறித்து செய்திகள் வடமாநில தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியானது. இதுபோன்ற செய்திகள் தவறானவை.
மற்ற மாநில தொழிலாளர்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு மிகவும் சிறப்பாக உள்ளது. திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை 3,000-க்கும் மேற்பட்ட வடமாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பிரச்னை, மிரட்டல் ஏதாவது ஏற்பட்டால் 9498181325 என்ற காவல் துறை உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
அது போன்ற புகார்கள் எங்களுக்கு கிடைத்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய விசாரணை செய்து, வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வடமாநிலத்தினரின் பாதுகாப்பை திருச்சி மாவட்ட காவல் துறை உறுதி செய்துள்ளது. அதேநேரம் சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்தியைக் கண்டு அஞ்ச வேண்டாம். இப்படி பொய்யான செய்திகளை பரப்பும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.