வாலிகண்டபுரத்தில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதைத் திருவிழா! - நெல் வகைகள்
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: வாலிகண்டபுரத்தில் அடுத்த தலைமுறைக்கு நஞ்சில்லா உணவுகளை தர வேண்டும் என்பதற்காக ''தமிழன் விதை இயற்கை வேளாண்மை அமைப்பு'' சார்பில் பாரம்பரிய விதைத் திருவிழா பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இன்று (ஜூலை 16) நடத்தப்பட்டது.
பெரம்பலூர் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். "ஆடி பட்டம் தேடி விதை.. நாடி வருது நாட்டு விதை" என்பதற்கேற்ப பாரம்பரிய விதை திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவில் விவசாயப் பெருமக்கள் பயன் பெறும் வகையில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ''விதை திருவிழா'' நடைபெற்றது.
இந்த விதைத் திருவிழாவில் பொதுமக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் நாட்டு ரக நெல் வகைகள், பருத்தி, மக்காச்சோளம், காய்கறி விதைகள், சிறு தானிய வகைகள் மற்றும் சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், அமிர்த கரைசல், பஞ்ச காவ்யம், உள்ளிட்ட இயற்கை உரங்கள் வைக்கப்பட்டன.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சடி சம்பா உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. மேலும் சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் சிறப்புமிக்கதாக அமைந்தது. இதனையடுத்து இயற்கை விவசாயிகள், இயற்கை விவசாயத்தை பற்றியும், நன்மைகள் பற்றியும், விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும் விதைத்திருவிழாவில் இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்கள், இயற்கை உரங்களான மண்புழு உரம், இயற்கை முறையில் தயாரித்த உணவு வகைகள், புத்தகங்கள் மற்றும் துணிப்பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.