நந்திபகவானுக்கும், சூரியனுக்கும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அண்ணாமலையார்! - cow pongal
🎬 Watch Now: Feature Video
Published : Jan 16, 2024, 4:25 PM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவதும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் அண்ணாமலையார் காட்சியளித்த நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர், மாட்டுப்பொங்கலான இன்று, அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சியளிக்கும் நிகழ்வையொட்டி, இன்று அதிகாலையில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று, பின்னர் காய்கறிகள், பழங்கள், முறுக்கு, லட்டு, அதிரசம், பணம் உள்ளிட்டவைகளைக் கொண்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நந்தி பகவானுக்கு காட்சியளித்த பின்னர் உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார், திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சியளித்தார். மேலும், இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சியளித்து, சூரியனுக்கு காட்சியளிப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
இதனைத் தொடர்ந்து, உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் மாடவீதிகளில் 3 முறை வலம் வருகின்றனர். இன்று மாலை 6 மணியளவில் திருவூடல் தெருவில் 3ஆம் முறையாக மாடவீதியுலா வந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனுக்கு இடையே ஊடல் நிகழும் விழா நடைபெறும்.